கால்பந்து

ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணம்... விரிவான பார்வை

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது.

டல்லாஸ்,

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) ஆட்டத்தில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியுடன் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது.

2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய ரொனால்டோ, இந்த தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்று போட்டிக்கு முன்பே அறிவித்திருந்தார். அதனால் இப்போட்டியில் இறுதி விசில் ஒலித்ததும் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்ததை உணர்ந்த அவர், மைதானத்திலேயே கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.

இந்த நிலையில் ரொனால்டோ உலகக்கோப்பையில் கடந்து வந்த பாதை குறித்து பாப்போம்,

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகம்:

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக , 21 வயதில் முதல் முறையாக களமிறங்கிய ரொனால்டோ, 6 போட்டிகளில் விளையாடினார்.6 போட்டிகளில் விளையாடி அவர் ஒரு கோல் அடித்தார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.போர்ச்சுகல் அணி அரையிறுதி வரை முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்தது.

2010 உலகக் கோப்பை

2010 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்த தொடரில் போர்ச்சுகல் அணி, ரவுண்ட் ஆப் 16 கட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. ரொனால்டோ, குழு சுற்றில் வடகொரியா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் பதிவு செய்தார்.

2014 உலகக்கோப்பை

2014 உலகக்கோப்பை பிரசிலில் நடைபெற்றது.2014 உலகக்கோப்பையில் காயத்தால் முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையிலும் உலகக்கோப்பையில் விளையாடிய ரொனால்டோ, கானாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஆனால் போர்ச்சுகல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது.

ரொனால்டோவின் சிறந்த தொடர்:

2018 உலகக்கோப்பை ரஷியாவில் நடைபெற்றது. ரொனால்டோவின் சிறந்த உலகக்கோப்பை தொடராக இது அமைந்தது. முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஸ்பெயினுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்த அவர், மொத்தம் 4 கோல்கள் அடித்தார். இருப்பினும் போர்ச்சுகல் ரவுண்ட் ஆப் 16-ல் உருகுவேயிடம் தோல்வியடைந்தது.

ரொனால்டோவின் சாதனை

2022 உலகக்கோப்பை கத்தாரில் நடைபெற்றது. கானாவுக்கு எதிராக பெனால்டியில் கோல் அடித்த ரொனால்டோ, தொடர்ந்து 5 உலகக்கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் . ஆனால் போர்ச்சுகல் காலிறுதியில் மொரோக்கோவிடம் தோற்று வெளியேறியது.

உலகக்கோப்பை பயணம் நிறைவு

41 வயதிலும் உலகக்கோப்பையில் விளையாடிய ரொனால்டோ, 6-வது உலகக்கோப்பையிலும் கோல் அடித்து புதிய வரலாறு படைத்தார். உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றில் ஸ்பெயினிடம் போர்ச்சுகல் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது.

ரொனால்டோ உலகக்கோப்பை சாதனைகள்

*2006 முதல் 2026 வரை தொடர்ந்து 6 உலகக் கோப்பைகளில் விளையாடிய வீரர்களில் ஒருவர்.

*6 உலகக்கோப்பைகளிலும் கோல் அடித்த முதல் வீரர்.

*உலகக்கோப்பை வரலாற்றில் 27 போட்டிகளில் 11 கோல்கள் பதிவு.

*உலகக்கோப்பையில் போர்ச்சுகலின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

*உலகக்கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், தனது சாதனைகளால் கால்பந்து வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.