கால்பந்து

25 சீசன்கள்...103 கோல்கள்... ரொனால்டோ படைத்த அடுத்த சாதனை

சவுதி புரோ லீக் வரலாற்றில் ரொனால்டோ இதுவரை 103 கோல்கள் அடித்துள்ளார்.

ரியாத் ,

சவுதி புரோ லீக் தொடரில் அல்-ரியாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நாசர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 83-வது நிமிடத்தில் கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

25-வது சீசனிலும் கோல்

ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணியில் தொடங்கிய தனது தொழில்முறை கால்பந்து பயணத்தில், தொடர்ந்து 25-வது சீசனாக கோல் அடித்துள்ளார் ரொனால்டோ. இதன்மூலம் தொடர்ந்து 24 சீசன்களில் கோல் அடித்திருந்த ஸ்வீடன் முன்னாள் வீரர் ஸ்லட்டான் இப்ராஹிமோவிச்சின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

சவுதி லீக்கிலும் சாதனை

சவுதி புரோ லீக் வரலாற்றில் ரொனால்டோ இதுவரை 103 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முகமது அல்-சஹ்லாவியுடன் இணைந்து முதலிடத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அல்-ரியாத் அணிக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

4-0 என அபார வெற்றி

சவுதி புரோ லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அல் நாசர் - அல் ரியாத் அணிகள் மோதின. இப்போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய அல் நாசர் அணிக்கு அப்துல்லா அல்-அம்ரி 18-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து, ஏஞ்சலோ கேப்ரியல் முதல் பாதியின் கூடுதல் நேரமான 45+1-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அல் நாசர் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து துவங்கிய 2-வது பாதியில் 58-வது நிமிடத்தில் ஜோவா பெலிக்ஸ் 3-வது கோலை பதிவு செய்தார். பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ 83-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில், அல் நாசர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் அல் நாசர் அணி 6 புள்ளிகளுடன், சவுதி புரோ லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.