கால்பந்து

தெற்காசிய பெண்கள் கால்பந்து: ஒரே பிரிவில் இந்தியா, வங்காளதேசம்

பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் அடுத்த மாதம் (மே) 25-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் அடுத்த மாதம் (மே) 25-ந் தேதி தொடங்கி ஜூன் 6-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் (டிரா) முறையில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதன்படி போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், இலங்கை, பூடான் அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், மாலத்தீவு அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மாலத்தீவையும் (மே 25-ந் தேதி), அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தையும் (மே 31-ந் தேதி) சந்திக்கிறது. இரு ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அரை இறுதிப்போட்டி ஜூன் 3-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 6-ந் தேதியும் நடக்கிறது.