லிஸ்பன்,
கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவே கால்பந்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய ரொனால்டோ, “இதுவே கால்பந்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம். ஒரு பிரமாண்டமான சாதனையை விட்டு செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோவின் ஒப்பந்தம் 2027-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ளது. இருப்பினும், தனது நீண்டகால கால்பந்து பயணத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்பதை அவரது இந்த பேட்டி உணர்த்துகிறது.
ஓய்வுக்கு பிறகு குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். மேலும், பயணம் செய்வது மற்றும் படல் (Padel) விளையாட்டில் ஈடுபடுவது உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். கால்பந்து தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், அதிலிருந்து விலகிய பிறகு ஏற்படும் வெற்றிடத்தை வேறு வழிகளில் நிரப்ப வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டுகால கால்பந்து பயணத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, தனது வாழ்க்கையில் 5 முறை பாலன் டி ஓர் விருதையும், 5 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.
தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்கள் என்ற பிரமாண்ட மைல்கல்லை எட்ட ரொனால்டோவுக்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த மைல்கல்லை எட்டிய பிறகு ஓய்வு பெறுவாரா அல்லது தொடர்ந்து விளையாடுவாரா என்பது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.