கால்பந்து

சாம்பியன்ஸ் லீக்கில் கோல் மழை... எதிரணிகளை தும்சம் செய்த பிஎஸ்ஜி, பார்சிலோனா, இன்டர் மிலன்

பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் ஆஸ்டன் வில்லாவை எதிர்கொண்டது.

நியான்,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), பார்சிலோனா, இன்டர் மிலன் அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

பிஎஸ்ஜி

வில்லாரியல் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பிஎஸ்ஜி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஜோவா நெவ்ஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 12-வது நிமிடத்தில் டெஸைர் டூயே, 13-வது நிமிடத்தில் சென்னி மாயுலு ஆகியோர் கோல் அடித்தனர்.

17-வது நிமிடத்தில் பேபியன் ரூயிஸ் கோல் அடிக்க, பிஎஸ்ஜி முதல் 17 நிமிடங்களிலேயே 4-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின் 50-வது நிமிடத்தில் ரூயிஸ் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். 78-வது நிமிடத்தில் டேவிட் போலி கோல் அடிக்க, பிஎஸ்ஜி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பார்சிலோனா

பார்சிலோனாவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் அந்த அணி ஆஸ்டன் வில்லாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் இளம் வீரர் லாமின் யமால் கோல் அடித்து பார்சிலோனாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இரண்டாவது பாதியில் ராபின்ஹா 52 மற்றும் 64-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்டர் மிலன்

மற்றொரு லீக் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மிலன் அணி, பெயனூர்டை எதிர்கொண்டது.

போட்டியின் 8-வது நிமிடத்தில் யான் பிசெக் கோல் அடித்து இன்டர் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். 34-வது நிமிடத்தில் பியோ எஸ்போசிட்டோ இரண்டாவது கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 54-வது நிமிடத்தில் பியோத்தர் ஜீலின்ஸ்கி கோல் அடிக்க, இன்டர் மிலன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT