கால்பந்து

நேஷன்ஸ் லீக் கால்பந்து - வேல்ஸை வீழ்த்திய போர்ச்சுகல்... 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி

யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கார்டிப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் - போர்ச்சுகல் அணிகள் மோதின.

கார்டிப்,

யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வேல்ஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

மாறி மாறி கோல்

யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கார்டிப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் - போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்து போர்ச்சுகலுக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அடுத்த 2 நிமிடங்களிலேயே வேல்ஸ் அணியின் டேவிட் புரூக்ஸ் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சோர்பா தாமஸ் கோல் அடிக்க, வேல்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து, 43-வது நிமிடத்தில் பெட்ரோ நெட்டோ கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார்.

மாற்று வீரர்

இதையடுத்து, இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டன. அப்போது மாற்று வீரராக களமிறங்கிய கார்லோஸ் போர்ப்ஸ் 70-வது நிமிடத்தில் கோல் அடித்து போர்ச்சுகலுக்கு 3-2 என்ற முன்னிலையை பெற்றுத் தந்தார்.

இதற்கிடையே, அடுத்தடுத்து மஞ்சள் அட்டைகளைப் பெற்ற போர்ச்சுகலின் பெட்ரோ நெட்டோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு 74-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும், எஞ்சிய நேரத்தில் வேல்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT