கால்பந்து

நேஷன்ஸ் லீக் - லமின் யமால் அசத்தல்... குரோஷியாவை வீழ்த்தி உலக சாதனை படைத்த ஸ்பெயின்

யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் - குரோஷியா அணிகள் மோதின.

செவில்லே,

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் குரோஷியாவை வீழ்த்தி ஸ்பெயின் மாபெரும் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

நேஷன்ஸ் லீக்

யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

லமின் யமால் அசத்தல்

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் நட்சத்திர இளம் வீரர் லமின் யமால் (Lamine Yamal) கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து 28-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் இவான் பெரிசிச் (Ivan Perisic) கொடுத்த பாஸை, டியான் டிரினா பெல்ஜோ (Dion Drena Beljo) ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

இருப்பினும், இந்த சமநிலை அதிக நேர, நீடிக்கவில்லை. அடுத்த மூன்றே நிமிடங்களில் (31-வது நிமிடம்) ஸ்பெயின் அணியின் மார்க் புபில் (Marc Pubill) கோல் அடித்து மீண்டும் ஸ்பெயினுக்கு முன்னிலையைப் பெற்று தந்தார். இதன்படி முதல் பாதி முடிவில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் வீரர்களின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. 63-வது நிமிடத்தில் லமின் யமால் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து ஸ்பெயினின் முன்னிலையை 3-1 என வலுப்படுத்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில், நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) ஸ்பெயினின் 4-வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

உலக சாதனை

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 40 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத முதல் ஆண்கள் அணி என்ற பிரமாண்ட உலக சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது.

SCROLL FOR NEXT