கால்பந்து

அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நடுவருக்கு சொந்த நாட்டில் வரவேற்பு

அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 52 போட்டி நடுவர்களில் ஓமர் ஆர்டனும் (சோமாலியா) ஒருவர். 2025-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றார். சோமாலியா நாட்டில் இருந்து உலகக் கோப்பையில் பணியாற்றப்போகும் முதல் நடுவர் என்ற பெருமையை பெறும் கனவோடு அவர் அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். அவரிடம் முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இருந்த போதிலும், அமெரிக்க குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரின் கூடுதல் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

சோமாலியா நாட்டினர் வருவதற்கு அமெரிக்கா நிறைய பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மியாமி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஓமர் ஆர்டனுக்கு சோமாலியாவில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.