கால்பந்து

யூனிட்டி கோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஜமைக்காவிடம் பணிந்தது இந்திய அணி

3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.

லண்டன்,

இந்தியா, ஜமைக்கா , நைஜீரியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய தேசிய அணிகள் பங்கேற்கும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டி மே 26 முதல் 30 வரை லண்டனில் நடைபெற்று வருகிறது. இது இரண்டு அரையிறுதிப் போட்டிகள், மூன்றாவது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 4 போட்டிகளை மட்டுமே கொண்ட குறுகிய கால தொடராகும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.

இந்திய அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை நேற்று எதிர்கொண்டது. 'தி வேலி' மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்து. இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நைஜீரிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் நைஜீரியா - ஜமைக்கா அணிகள் மோத உள்ளனர். அதே சமயம், 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. 3-வது இடத்துக்கான போட்டி மற்று இறுதிப்போட்டி இரண்டும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. பிபா கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 136-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.