கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து தொடர் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா? எகிப்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

போட்டியின் முடிவை அதற்கு தொடர்பே இல்லாத நபர் முடிவு செய்யும் போக்கு பரவலாக விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

கெய்ரோ

உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இதில், நேற்றிரவு நடந்த போட்டியில் அர்ஜென்டினாவும், எகிப்தும் விளையாடின. போட்டி முடிவில் 3-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடர் முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எகிப்து நாட்டின் முன்கள வீரரான முஸ்தபா ஜிகோ பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். போட்டி தொடங்கிய 15-வது நிமிடத்தில் எகிப்தின் யாசர் இப்ராகிம் அணிக்கான முதல் கோலை போட்டார்.

எகிப்து முன்னிலை

இதனால், எகிப்து 1-0 என முன்னிலையில் இருந்தது. 2-வது கோலை ஜிகோ போட்டபோது, வீடியோ உதவிக்கான நடுவர் அதனை கோலாக ஏற்க மறுத்து விட்டார். எகிப்து அந்த முடிவை ஏற்றுக்கொண்டது. எனினும், போராடி 67-வது நிமிடத்தில், முகமது சலா மற்றும் ஹைசிம் ஹசன் உதவியுடன் முஸ்தபா ஜிகோ மற்றொரு கோலை போட்டு, எகிப்து அணியை 2-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இந்த போட்டியின் 79-வது நிமிடத்தில், மெஸ்சியின் ப்ரீ-கிக் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினாவின் ரொமிரோ கோல் போட்டார். அடுத்த 4-வது நிமிடத்தில் மெஸ்சி மற்றொரு கோல் போட்டார். அது கோல் கீப்பரின் கையுறையில் பட்டு கோலாக விழுந்தது. இதனால், போட்டியை 2-2 என சமனுக்கு கொண்டு சென்றார்.

கோல் மறுப்பு

2-வது பாதியின் தொடக்கத்தில் எகிப்தின் ஜிகோ கோல் போட்டும், அதனை நடுவர் மறுத்தது சர்ச்சையாகி உள்ளது. ஒரு வேளை அந்த கோல் ஏற்கப்பட்டு இருக்கும் என்றால், போட்டி முடிவு திசை மாறியிருக்கும். ஆனால், அதனை பவுல் (விதிமீறல்) என நடுவர் கூறி, கோல் மறுக்கப்பட்டது.

இதனால், போட்டி முடிவுக்கான விசில் ஊதப்பட்டதும், ஜிகோ உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டார். போட்டியில் வெளிப்படைத்தன்மை இல்லை. நடுவரால் அநீதி இழைக்கப்பட்டு விட்டது. தெளிவாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

தொடர்ந்து அவர், ஒட்டுமொத்த நாட்டின முயற்சிகளை நடுவர் வீணடித்து விட்டார். போட்டி தொடக்கத்தில் இருந்து அவர் எங்களுக்கு எதிராகவே இருந்தார். அர்ஜென்டினாவுக்கு எதிராக நாங்கள் 2-0 என வெற்றியாளர்களாக இருக்க அனுமதிக்கப்படவில்லை.

மன்னிப்பு கேட்ட ஜிகோ

இந்த போட்டித்தொடர் முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. கடவுள் எங்களுக்கு போதியவராக இருக்கிறார். விவகாரங்களை தீர்ப்பதில் சிறந்தவராக இருக்கிறார் என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறினார்.

எகிப்து ஆதரவாளர்களிடம் ஜிகோ மன்னிப்பும் கேட்டு கொண்டார். உங்களை இன்று மகிழ்ச்சிப்படுத்த நாங்கள் விரும்பினோம். அதனை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால், அது எங்களுடைய கைகளை மீறி இருந்தது என நான் உறுதியாக கூறுகிறேன். அது நடுவர்களின் கைகளில் இருந்தது. இந்த போட்டித்தொடர் முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. அது தெளிவாக தெரிகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.

போட்டியின் 20-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை கோலாக மாற்ற மெஸ்சி முயன்ற நிலையில், எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷோபீர் சரியாக கணித்து, அதனை தடுத்து விட்டார். ப்ரீ-கிக் வாய்ப்பின்போதும் மெஸ்சியின் முயற்சி தோல்வியடைந்தது. அது கோலாக மாறவில்லை. போட்டியில் 2 முறை மெஸ்சி தனக்கான வாய்ப்பை பயன்படுத்த முடியாதது அவருடைய திறமையின் குறைவை வெளிப்படுத்தியது.

பயிற்சியாளர் அதிருப்தி

இதேபோன்று, எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி மறுக்கப்பட்டது. நாங்கள் அடித்த 2-வது கோலும் ரத்து செய்யப்பட்டது.

ஒருவேளை நடப்பு உலக சாம்பியன் தொடரில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது மெஸ்சி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காகவோ இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்த செயல் சர்ச்சையானது.

சிவப்பு அட்டை

போஸ்னியாவுக்கு எதிரான போட்டி ஒன்றின்போது அமெரிக்க வீரர் போலரின் பலோகன் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி பாதியில் வெளியேற்றப்பட்டார். விதிமுறைப்படி சிவப்பு அட்டை பெறும் வீரருக்கு அடுத்த ஆட்டத்தில் விளையாட தடை உண்டு. இதனால் பெல்ஜியத்துக்கு எதிரான 3-வது சுற்று போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோவை அழைத்து பேசி, பலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கொண்டார். இந்த முடிவை மோசமானது என்றும் வாதிட்டார். அவரது நெருக்கடியை தொடர்ந்து சிவப்பு அட்டை நடவடிக்கையை பிபா நிறுத்தி வைத்தது.

டிரம்ப் நடனம்

இதனால் பலோகன் பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதற்கு பெல்ஜியம் அணி தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. எனினும், அந்த அணியின் கோரிக்கையை பிபா நிராகரித்தது கவனிக்கத்தக்கது.

எனினும், அந்த போட்டியில் இருந்து அமெரிக்கா தோற்று வெளியேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்க அணி மற்றும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டிரம்ப்பின் தலையீட்டை கிண்டல் செய்யும் வகையில், போட்டியில் 4-வது கோல் அடித்து அமெரிக்காவை காலிறுதியில் இருந்து வெளியேற்றியதும், பெல்ஜியம் வீரர்கள் களத்திலேயே ‘டிரம்ப் நடனம்’ ஆடினர். இதுபற்றிய வீடியோவும் வைரலானது.

தனிநபர் தலையீடு

உலக அளவில் அதிக ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும், அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட கூடிய உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இதுபோன்று, விதிகளை மீறும் வகையில் தனிநபர் தலையீடு என்பது சர்ச்சையாகி உள்ளது.

போட்டியின் முடிவை அதற்கு தொடர்பே இல்லாத நபர் முடிவு செய்யும் போக்கு பரவலாக விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த சூழலில், எகிப்து கால்பந்து அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளர், போட்டி நடுவர்களுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகளும் பரவலாக விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.