மும்பை,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று விளையாடின.உலக அளவில் கால்பந்து தான் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா உலககோப்பை கால்பந்து தொடரில் விளையாடியதில்லை. ஒவ்வொரு முறையும் தகுதி சுற்றோடு வெளியேறி விடுகிறது. இந்த சீசனில் ஆசிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் 2-வது ரவுண்டில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா 3-வது இடத்தை பிடித்து அடுத்த ரவுண்டுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்தியாவில் கிரிக்கெட் தேசிய உணர்வுடன் இணைந்த விளையாட்டாக மாறியுள்ளது.அதிக ரசிகர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளம்பர வருவாய் ஆகியவற்றில் கிரிக்கெட் தான் முன்னிலையில் தொடர்கிறது.கால்பந்துக்கு கிடைக்கும் கவனமும் முதலீடும் குறைகிறது. கால்பந்தில் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.கால்பந்து உலகளவில் பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், இந்தியாவில் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்படவில்லை.
தரமான கால்பந்து மைதானங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் இளைஞர் அகாடமிகள் இன்னும் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவில் இல்லை.கிராமப்புறங்களில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
*உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் குறைவு
* வீரர்களுக்கு குறைந்த சம்பளம் மற்றும் வாய்ப்புகள்
* பள்ளி/கல்லூரி அளவில் கால்பந்துக்கு முக்கியத்துவம் குறைவு
ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் உள்ளூர் நேரப்படி இரவு நடைபெறும். ஆனால் இந்திய நேரப்படி நள்ளிரவு அல்லது அதிகாலை ஆகும்.இதனால் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட முக்கிய கால்பந்து தொடர்களை பார்ப்பதற்க்கு இந்தியாவில் யாரும் முன்னுரிமை அளிப்பதில்லை. அதிகாலை நேர ஒளிபரப்பால் பல ரசிகர்கள் நேரலையில் பார்க்க முடியாமால் தவிக்கின்றனர்.
இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும், கால்பந்து விளையாட்டு ஆண்டுதோறும் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கால்பந்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதுடன், உள்நாட்டு லீக் போட்டிகள் மற்றும் சர்வதேச கால்பந்து தொடர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்தியாவில் கேரளாவில் கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் மற்றும் கொச்சி பகுதிகளில் கால்பந்து மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் கலந்திருக்கிறது.உலகக் கோப்பை நடைபெறும் காலங்களில் கிராமம் முதல் நகரம் வரை ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நாடுகளின் கொடிகளை ஏற்றி கொண்டாடுகின்றனர்.
இந்தியாவில் கால்பந்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தியன் சூப்பர் லீக் (ISL), இன்று நாட்டின் உயர்மட்ட தொழில்முறை கால்பந்து தொடராக உருவெடுத்துள்ளது. இந்த லீக், இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் தரத்தையும், ரசிகர் ஆதரவையும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியுள்ளது.
இந்த தொடரில், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட், சென்னையின் எப்சி, பெங்களூரு எப்சி, எப்சி கோவா, மும்பை சிட்டி எப்சிஉள்ளிட்ட முன்னணி அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுவதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்கின்றனர்.இந்திய வீரர்களின் திறனை மேம்படுத்துவதிலும், கால்பந்துக்கு புதிய ரசிகர்களை உருவாக்குவதிலும் இந்தத் தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரளா, மேற்கு வங்காளம், கோவா, மணிப்பூர், மிசோரம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. உலகக் கோப்பை போன்ற சர்வதேச போட்டிகள் நடைபெறும் காலங்களில், இந்த மாநிலங்களில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.