அட்லாண்டா,
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முக்கியமான 3-வது சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, எகிப்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு துவங்கும் இந்த போட்டி அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெறுகிறது.
முந்தைய சுற்றில் கேப்வெர்டே அணியை கடும் போராட்டத்துக்கு பிறகு 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, எகிப்தை லேசாக எடுத்துக்கொள்ளாது என்பதில் சந்தேகமில்லை.
வழக்கம்போல் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சியின் ஆட்டத்தின் மீதே ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே 7 கோல்கள் அடித்து, கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்டுடன் கோல்டன் பூட் பட்டியலில் சமநிலையில் உள்ள மெஸ்சி, எகிப்துக்கு எதிராகவும் கோல் மழை பொழிந்து அந்த எண்ணிக்கையை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மறுபுறம், முதல் முறையாக உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ள எகிப்து, வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
அர்ஜென்டினா - எகிப்து அணிகள் இதற்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இரண்டு முறை மோதியுள்ளன. அந்த இரு ஆட்டங்களிலும் அர்ஜென்டினாவே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், உலகக் கோப்பை மேடையில் இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.