சான் பிரான்சிஸ்கோ
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜோர்டான் அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா வெற்றி பெற்றது.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் சான் பிரான்சிஸ்கோ ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற 'ஜே' பிரிவு லீக் ஆட்டத்தில் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் அணிகள் விளையாடின.
இதில், போட்டியின் 36-வது நிமிடத்தில் ஜோர்டான் அணிக்காக, நிசார் அல்-ரஸ்தான் முதல் கோலை போட்டார். இதனால், 1-0 என்ற புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால், ஜோர்டான் கை ஓங்கி இருந்தது.
இதன்பின்பு, போட்டியின் 69-வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் நதீர் பென்பவாலி தன் அணிக்கான முதல் கோலை போட்டார். இதனால் போட்டி 1-1 என்ற புள்ளி கணக்கில் சமன் அடைந்தது.
தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அல்ஜீரியாவுக்கான 2-வது கோலை அமின் கவுரி போட்டார். இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் அந்த அணி வெற்றியை நோக்கி சென்றது. அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை.
ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்த போட்டியில், 2-வது பாதியில் அதிரடி காட்டிய அல்ஜீரியா 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜோர்டான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.