கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பானை 1-2 புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி

பிரேசிலின் கேஸ்மிரோ 56-வது நிமிடத்தில் அணிக்கான முதல் கோலை போட்டார்.

ஹூஸ்டன்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானை 1-2 புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலகக்கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

முதல் பாதி

இதன்படி இரவு 10.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 29-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைஷு சனோ அதிரடியாக, அணிக்கான முதல் கோலை போட்டார்.

அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதி முடிவில் 1-0 புள்ளி கணக்கில் ஜப்பான் அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் கோல்கள் விழும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

2-வது பாதியில் விறுவிறுப்பு

இதற்கேற்ப 2-வது பாதியில் விறுவிறுப்பு காணப்பட்டது. பிரேசிலின் கேஸ்மிரோ 56-வது நிமிடத்தில் அணிக்கான முதல் கோலை போட்டார். இதனால், போட்டி 1-1 என சமன் அடைந்தது. தொடர்ந்து, கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் (96-வது நிமிடம்) கேப்ரியேல் மார்டினெல்லி மற்றொரு கோலை போட்டார்.

இதனால், பிரேசில் அணி 2-1 புள்ளி கணக்கில் முன்னிலைக்கு வந்தது. இதன்பின்பு ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஜப்பானை 1-2 புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது. போட்டியின்போது பிரேசில் அணிக்கு 2 முறையும், ஜப்பான் அணிக்கு 3 முறையும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சிவப்பு அட்டை யாருக்கும் காண்பிக்கப்படவில்லை.