ஹூஸ்டன்,
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5-1 என்ற கணக்கில் சுவீடனை நெதர்லாந்து அணி வீழ்த்தியது.
23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரி விலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணி கள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இதில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு 10.30 மணிக்கு நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுவீடன், நெதர்லாந்து அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்து நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 5 மற்றும் 17-வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்களை அடித்தார். இதனையடுத்து முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 47, 54-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் காக்போ 2 கோல்களை அடித்தார். தொடர்ந்து போராடிய சுவீடன் அணி 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை அந்த அணியின் வீரர் எலங்கா அடித்தார். பின்னர் 89-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில், ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 5 கோல்களை அடித்தது.
இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஜப்பானுக்கு எதிராக 'டிரா செய்த நெதர்லாந்து அணி தற்போது முதல் வெற்றியை பதிவு செய்தது.