கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - பராகுவேவை வீழ்த்திய அமெரிக்கா: பலோகன் இரட்டை கோல் அடித்து அசத்தல்

பராகுவே தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

கனடா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன.

48 அணிகள் பங்கேற்பு

வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள், லீக் சுற்றில் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் மூன்றாவது இடம் பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

அமெரிக்காவுக்கு அதிரடி தொடக்கம்

இந்த நிலையில், குரூப் டி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பராகுவே வீரர் டாமியன் போபாடில்லா அடித்த ஓன் கோல் மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

பலோகன் இரட்டை கோல்

இதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் போலரின் பலோகன் கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். தொடர்ந்து முதல் பாதி முடிவதற்கு முன்பாக மீண்டும் கோல் அடித்த பலோகன், அமெரிக்காவை 3-0 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

பராகுவேவின் ஆறுதல் கோல்

முதல் பாதி முடிவில் 3-0 என பின்தங்கியிருந்த பராகுவே, இரண்டாவது பாதியில் போராடியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் மௌரிசியோ கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். 2-ம் பாதி முடிவதற்கு முன்பாக ஜியோவானி ரெய்னா கோல் அடித்து அமெரிக்காவை 4-1 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

குரூப் டி-யில் முதலிடம்

இறுதியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளுடன் குரூப் டி பிரிவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.