மெக்சிகோ சிட்டி,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ சிட்டியில் இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதிக அணிகள் களம் காணும் உலக போட்டி இதுதான். அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகளும் என 32 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறும். அதில் இருந்து 16 அணிகள் 3-வது சுற்றை (ரவுண்ட் 16) எட்டும். தொடர்ந்து கால்இறுதி, அரைஇறுதி என யுத்தம் நீண்டு, கடைசியில் ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.
'நம்பர் ஒன்' அணியான பிரான்ஸ், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 2-ம் நிலை அணியான ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன. உலகக் கோப்பையை அதிக முறை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணி (5 முறை) மீண்டும் எழுச்சி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. மெக்சிகோ சிட்டியில் நடக்கும் தொடக்க போட்டியில் (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும், தென்ஆப்பிரிக்காவும் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன.
இதே பிரிவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி) நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா- செக்குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6.240 கோடியாகும். முந்தைய உலகக்கோப்பையுடன் ஒப்பிடும் போது இது 50 சதவீதம் அதிகமாகும்.
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி ரூ.476 கோடியை பரிசுத்தொகையாக அள்ளும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.314 கோடி கிடைக்கும். 3-வது. 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் முறையே ரூ.276 கோடி, ரூ.257 கோடி வீதம் பெறும்.
லீக் சுற்றோடு வெளியேறும் அதாவது 32-வது முதல் 48-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.86 கோடி அளிக்கப்படும். அத்துடன் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளுக்கும் போட்டி கட்டணமாக தலா ரூ.14.5 கோடி வழங்கப்படும்.
1930-உருகுவே
1934-இத்தாலி
1938-இத்தாலி
1950-உருகுவே
1954-மேற்கு ஜெர்மனி
1958-பிரேசில்
1962-பிரேசில்
1966-இங்கிலாந்து
1970-பிரேசில்
1974-மேற்கு ஜெர்மனி
1978-அர்ஜென்டினா
1982-இத்தாலி
1986-அர்ஜென்டினா
1990-மேற்கு ஜெர்மனி
1994-பிரேசில்
1998-பிரான்ஸ்
2002-பிரேசில்
2006-இத்தாலி
2010-ஸ்பெயின்
2014-ஜெர்மனி
2018-பிரான்ஸ்
2022-அர்ஜென்டினா
2026 - ???