போஸ்டன்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட்அவுட்டில் ஜெர்மனியை பராகுவே வீழ்த்தியது.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகள் விளையாடின. அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 42-வது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனி பின்தங்கி இருந்தது.
இதன்பின்பு இரண்டாவது பாதி ஆட்டம் தொடர்ந்தது. 54-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கை ஹாவெர்ட்ஜ் ஒரு கோலை போட்டார். இதனால் போட்டி 1-1 என சமனானது. இதன்பின்னர் போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தும் பலனில்லை. இதனால், 90 நிமிடங்களுக்கு பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதிலும் 30 நிமிடங்கள் வரை கோல் அடிக்கப்படவில்லை. பின்னர் கிடைத்த 3 நிமிடங்களிலும் கோல் விழவில்லை. இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் ஆட்டம் தொடர்ந்தது. இதில், ஜெர்மனிக்கு முதலில் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
எனினும், முதல் கோலை அடிக்க அது தவறியது. ஆனால், பராகுவே முதல் வாய்ப்பை கோலாக மாற்றியது. இதுபோன்று மொத்தம் 6 முறை கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பில், ஜெர்மனி 3 முறையும், பராகுவே 4 முறையும் கோல் அடித்தன.
இதனால், பெனால்டி ஷூட்அவுட்டில் 3-4 என்ற புள்ளி கணக்கில், பலம் வாய்ந்த ஜெர்மனியை, பராகுவே வீழ்த்தியது. இதனை அடுத்து, ஜெர்மனி அணி, பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.