ஆக்லாந்து,
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் எப்ஐஎச் மகளிர் ஆக்கி நேஷன்ஸ் கோப்பை 2025-26 தொடரின் குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணி, அமெரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
போட்டி தொடங்கியதும் அமெரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4-வது நிமிடத்தில் ஆஷ்லி செஸ்ஸா கோல் அடித்து அமெரிக்காவுக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 7-வது நிமிடத்தில் மேடி ஜிம்மர் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். இதனால் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது ஆட்ட வேகத்தை அதிகரித்தது. 17-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீராங்கனை தீபிகா கோலாக மாற்றி அணியின் முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் 24-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பையும் தீபிகா கோலாக மாற்றி ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நவ்நீத் கவுர் சிறப்பாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதன்மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. எனினும், எந்த அணியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 3-2 என்ற முன்னிலையை இறுதிவரை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது.
இரண்டு கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய தீபிகாவுக்கு ஆட்டநாயகி (Player of the Match) விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளுடன் குரூப்-ஏ பிரிவில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே பிரிவில் ஜப்பான அணி முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் ஜப்பானை நாளை காலை 6.30 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது.