ஹாக்கி

உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா தோல்வி

இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

ஆம்ஸ்டெல்வின்,

16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 'டி' பிரிவில் அங்கம் வகிக்கும் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் 3-ம் நிலை அணியான இங்கிலாந்துடன் மல்லு கட்டியது.

முதல் வினாடியில் இருந்தே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் நிகோ லஸ் பண்டுராக் 13-வது நிமிடத்தில் கோலடித்தார். அடுத்த 10 நிமிடங்களில் இந்தியா 2 கோல் போட்டு அசத்தியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 16-வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 24-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் பிற்பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி வீரர்கள் ஸ்டூவர்ட் ரஷிமியர் 38-வது நிமிடத்திலும், ஹென்ரி கிராப்ட் 42-வது நிமிடத்திலும், நிகோலஸ் பண்டுராக் மீண்டும் 42-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்தனர். முடிவில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.