ஜலந்தர்,
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்து தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் (3, 33 மற்றும் 58-வது நிமிடம்) அடித்தார். சுக்ஜீத் சிங் மற்றொரு கோல் அடித்தார்.
ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தென்கொரியாவை சந்திக்கிறது. முன்னதாக நடந்த மற்ற ஆட்டங்களில் தென்கொரியா 5-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தியும், ஜப்பான் 2-2 என்ற கணக்கில் சீனாவுடன் டிரா செய்தும் அரையிறுதிக்கு முன்னேறியது.