ஆக்லாந்து,
மகளிர் எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி, ஜப்பான், அமெரிக்கா, உருகுவேவுடன் ’ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ’பி’ பிரிவில் சிலி, பிரான்ஸ், கொரியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.
இந்த தொடரில் குரூப்-ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணி, ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணியின் சலிமா டெட் 33-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து ஜப்பானின் ஹிராமிட்சு 35-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
இதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடியநிலையில், ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் லால்ரெம்ஸ்யாமி கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெற செய்தார். பதில் கோல் அடிக்க ஜப்பான் போராடியும் முடியாததால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் இந்திய அணி 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா அடுத்ததாக உருகுவே அணியை வருகிற 18-ந் தேதி எதிர்கொள்ளவுள்ளது. அதேவேளையில், இப்பிரிவிலிருந்து அரையிறுதிக்கான இரண்டாவது இடத்தை பிடிப்பதற்காக ஜப்பானும் அமெரிக்காவும் மோதவுள்ளன.