ஹாக்கி

தோல்வியே சந்திக்காமல் நியூசிலாந்து தொடரை நிறைவு செய்த இந்தியா

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஆக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி தோல்வியை சந்திக்காமல் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது.

முதல் போட்டியில் வெற்றி

நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. உத்தம் சிங், ஷர்தானந்த் திவாரி மற்றும் கேப்டன் சஞ்சய் ஆகியோர் இந்திய அணிக்காக கோல் அடித்தனர்.

அடுத்த இரு ஆட்டங்களும் சமன்

நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற 2-வது போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அங்கத் பிர் சிங் மற்றும் கேப்டன் சஞ்சய் ஆகியோர் இந்திய அணிக்காக கோல் அடித்தனர்.

தொடர்ந்து நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற கடைசிப் போட்டியும் 2-2 என சமனில் முடிந்தது. இதில் கேப்டன் சஞ்சய் மற்றும் கார்த்தி செல்வம் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

3 போட்டிகளிலும் கோல்

இந்தத் தொடரில் இந்திய கேப்டன் சஞ்சய் மூன்று போட்டிகளிலும் தலா ஒரு கோல் அடித்து மொத்தம் 3 கோல்களுடன் அணியின் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்ந்தார். குறிப்பாக, பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றி அணியின் வெற்றிக்கும், டிராவுக்கும் முக்கியப் பங்களிப்பு அளித்தார்.

100 ஆண்டுகால விளையாட்டு உறவு

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர், இரு நாடுகளின் 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. 1926-ம் ஆண்டு மேஜர் தயான் சந்த் இடம்பெற்ற இந்திய ராணுவ ஆக்கி அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதுவே இரு நாடுகளின் ஆக்கி உறவின் தொடக்கமாக அமைந்தது.

SCROLL FOR NEXT