ஜலந்தர்,
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் தென்கொரியாவை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.
தென்கொரியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 8-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு முன்னிலை தேடித்தந்தார். தொடர்ந்து 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்றினார்.
15-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தனது சிறப்பான டிராக்-பிளிக் மூலம் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. 33-வது நிமிடத்தில் ஷிலாநந்த் லாக்ரா கோல் அடித்தார். அடுத்த நிமிடமே சுக்ஜீத் சிங் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 5-0 ஆக உயர்த்தினார்.
36-வது நிமிடத்தில் சஞ்சய் கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதனால் இந்தியா 7-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அங்கத் பீர் சிங் கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை 8-0 என உறுதி செய்தார்.
இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசத்தை 13-0 என்ற கணக்கிலும், சீனாவை 5-2 என்ற கணக்கிலும், ஜப்பானை 4-1 என்ற கணக்கிலும், மலேசியாவை 4-2 என்ற கணக்கிலும் வீழ்த்தியிருந்தது.
தென்கொரியாவுக்கு எதிரான வெற்றியுடன் லீக் சுற்றில் மொத்தம் 15 புள்ளிகளைப் பெற்று இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த 5 போட்டிகளிலும் சேர்த்து 34 கோல்களை அடித்துள்ள இந்தியா, 5 கோல்களை மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது.
லீக் சுற்று முடிவில் ஜப்பான் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், மலேசியா 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், தென்கொரியா 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையடுத்து நவம்பர் 4-ம் தேதி மொகாலியில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் தென்கொரியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதுகின்றன.