ரோட்டர்டாம்,
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள ஹஸேலார்வெக் மைதானத்தில் ஆண்களுக்கான FIH புரோ ஹாக்கி லீக் (Men's FIH Pro Hockey League) தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது லீக் போட்டியில், இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.
போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மந்தீப் சிங் (7-வது நிமிடம்), ஷிலானந்த் லக்ரா (13-வது நிமிடம்) மற்றும் நீலகண்ட சர்மா (35-வது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ரபேல் ஹார்ட்கோப் ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.
இன்றைய போட்டியில் களம் கண்டதன் மூலம் 33 வயதான மன்பிரீத் சிங், இந்தியாவின் சார்பில் அதிக சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணி வருகிற 21-ந்தேதி நெதர்லாந்து அணியுடனும், அதனைத் தொடர்ந்து 23 மற்றும் 26 ஆகிய தேர்திகளில் பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.