ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

இந்திய அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.

லண்டன்,

புரோ ஆக்கி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

புரோ ஆக்கி லீக்

9 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

பாகிஸ்தான் முதல் கோல்

போட்டி தொடங்கிய 8-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் அகமது நதீம் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இந்தியாவின் பதிலடி

இதற்கு பதிலடியாக 22-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். தொடர்ந்து 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் நீலகண்ட் ஷர்மா கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். ஆதிக்கத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு 40-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங்கும், 52-வது நிமிடத்தில் தி ரஜிந்தர் சிங்கும் கோல் அடித்து அசத்தினர்.

4-1 என முன்னிலை

இதனால் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 53-வது நிமிடத்தில் அபு மக்மூத், 60-வது நிமிடத்தில் மொயின் ஷகீல் ஆகியோர் கோல் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

திரில் வெற்றி

எனினும் மீதமிருந்த நேரத்தில் இந்திய அணி கோல் விட்டுக்கொடுக்காததால் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.