ஹாக்கி

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு... தமிழக வீரர் கார்த்தி செல்வத்திற்கு இடம்

இந்திய அணி நவம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

புதுடெல்லி,

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணியை ஆக்கி இந்தியா அறிவித்துள்ளது. தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

3 போட்டிகள்

இந்திய அணி நவம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான விளையாட்டு நட்புறவு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.

100 ஆண்டு கால நட்புறவு

கடந்த 1926-ம் ஆண்டு மேஜர் தியான் சந்த் இடம்பெற்ற இந்திய ராணுவ ஆக்கி அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. எந்தவொரு விளையாட்டிலும் இந்திய அணி வெளிநாட்டுக்கு சென்ற முதல் சுற்றுப்பயணம் அதுவாகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தற்போது இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

சஞ்சய் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைக் கொண்ட கலவையான அணியாக இது அமைந்துள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ்., பவன்.

தடுப்பாட்ட வீரர்கள்: தலேம் பிரியோபார்த்தா, சஞ்சய் (கேப்டன்), நிலம் சஞ்சீப் எக்ஸ், ஷர்தா நந்த் திவாரி, அன்மோல் எக்கா, யாஷ்தீப் சிவாச்.

நடுகள வீரர்கள்: அங்கத் பீர் சிங், ஆதித்யா அர்ஜுன் லாலகே, ரபிசந்திர சிங், விஷ்ணுகாந்த் சிங், மன்மீத் சிங், ரோஷன் குஜூர், வெங்கடேஷ் கெஞ்சே.

முன்கள வீரர்கள்: அஜீத் யாதவ், உத்தம் சிங், கார்த்தி செல்வம், அர்ஷ்தீப் சிங், அரைஜீத் சிங் ஹுண்டல்.

இந்தியா - நியூசிலாந்து போட்டி அட்டவணை:

மூன்று போட்டிகளும் ஆக்லாந்தில் உள்ள லாயிட் எல்ஸ்மோர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன.

- நவம்பர் 19 – முதல் போட்டி – காலை 11 மணி.

- நவம்பர் 21 – 2-வது போட்டி – காலை 8.30 மணி.

- நவம்பர் 22 – 3-வது போட்டி – காலை 6.30 மணி. (அனைத்தும் இந்திய நேரப்படி.)

SCROLL FOR NEXT