ஆம்ஸ்டெல்வீன்,
2026-ம் ஆண்டு மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடரில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வாக்னர் மைதானத்தில் நடைபெற்ற 5-வது இடத்துக்கான ஆட்டத்தில், இந்தியா-ஜெர்மனி அணிகள பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று 5-வது இடத்தை பிடித்தது.
1974-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மகளிர் ஆக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, 52 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 5-வது இடத்தைப் பிடித்துள்ள இந்திய அணி, உலகக்கோப்பை வரலாற்றில் 2-வது முறையாக டாப் 5-க்குள் இடம்பெற்று அசத்தியுள்ளது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் கோல் எதுவும் பதிவாகவில்லை. 2-வது பாதியில் இந்திய அணி அதிரடியாக ஆடியது. 43-வது நிமிடத்தில் இஷிகா அபாரமான பீல்ட் கோல் அடித்து இந்தியாவுக்கு 1-0 முன்னிலை பெற்றுத் தந்தார். அடுத்த நிமிடமே 44-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் கோல் அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
தொடர்ந்தது 47-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் தனது 2-வது கோலை அடித்து இந்தியாவை 3-0 என வலுவான முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். போட்டியின் 59-வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை லின் கிரிங்க்ஸ் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், அதன் பின்னர் இந்தியாவின் தடுப்பாட்டத்தை ஜெர்மனியால் உடைக்க முடியவில்லை.
முடிவில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி 5-வது இடத்தைக் கைப்பற்றி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.