ஹாக்கி

மகளிர் ஆக்கி உலகக்கோப்பை தகுதி சுற்று அரையிறுதியில் இத்தாலியை எதிர்கொள்கிறது இந்திய அணி

2026-ம் ஆண்டுக்கான ஆக்கி உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று விட்டது.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மகளிர் ஆக்கி உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெற்று வருகின்றன.

இதில், இந்திய மகளிர் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஆகஸ்ட் மாதம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளை பெற்று உள்ளது. இந்த பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து அணியும் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும், 2 வெற்றியும், ஒரு டிராவும் செய்துள்ள இந்திய அணி அதிக கோல் வித்தியாசத்துடன் முதல் இடத்திற்கு முன்னேற்றமடைந்து உள்ளது. ஸ்காட்லாந்து 2-வது இடத்தில் உள்ளது.

போட்டித்தொடரின் விதியின்படி, 2026-ம் ஆண்டுக்கான ஆக்கி உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்று விட்டது.

இதனையடுத்து, இந்திய அணி அரையிறுதியில், இத்தாலி அணியுடன் விளையாட உள்ளது. இத்தாலி அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அதன் பிரிவில் 2-ம் இடத்தில் உள்ளது. இதனால், இந்திய அணி அரையிறுதியில் இத்தாலியை எளிதில் எதிர்கொள்ள இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.