ஆம்ஸ்டெல்வீன்
உலகக்கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் நேற்று 5-வது இடத்துக்கான ஆட்டம் நடந்தது. நெதர்லாந்தில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் வாக்னர் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியாவும், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் விளையாடின.
இதில், முதல் பாதியில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதியில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இஷிகா சவுத்ரி 43-வது நிமிடத்தில் முதல் கோலை போட்டு, அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இதன்பின்பு, 44-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் 2-வது கோலையும், 47-வது நிமிடத்தில் 3-வது கோலையும் போட்டு 3-0 என இந்தியாவை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். ஜெர்மனியின் லின் கிரிங்ஸ் 59-வது நிமிடத்தில் ஒரு கோலை போட்டார். எனினும், போட்டி முடிவில் 3-1 என ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது.