ஐதராபாத்,
16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
நேற்றிரவு அரங்கேறிய இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 18-வது இடத்தில் இருக்கும் இத்தாலியுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் தாக்குதலில் இந்திய அணியின் கை சற்று ஓங்கி இருந்தாலும், இத்தாலி அணியும் தாக்குதல் ஆட்டத்தில் கடும் சவால் அளித்தது. இத்தாலியின் தடுப்பு அரணை தகர்த்து கோலடிக்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டியது இருந்தது. ஒருவழியாக 40-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மனிஷா சவுகான் இந்த கோலை போட்டார்.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 59-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியினரும் சில பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோட்டை விட்டனர்.
முன்னதாக நடந்த மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து அணியில் சார்லோட் பிங்ஹாம் (25-வது நிமிடம்), டார்சி போர்னி (29-வது நிமிடம்) கோலடித்தனர். இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.