பிற விளையாட்டு

கேலோ இந்தியா திட்டத்திற்கு ரூ.29,054 கோடி – மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு

இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கேலோ இந்தியா திட்டத்திற்கு ரூ.29,054 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சிக்கும் ஆதரவாக, இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.7,387 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-27ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.425 கோடியாக இருந்த நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பு கேலோ இந்தியா திட்டத்தை விட தற்போதைய ஒப்புதல் பெற்ற நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகம் என்றும், இளைஞர் மேம்பாடு, தேச கட்டமைப்பு மற்றும் இந்தியாவை உலகின் முன்னணி விளையாட்டு நாடாக உருவாக்கும் நோக்கில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.