பிற விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் மராட்டியத்தை சேர்ந்த அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் சொந்தமாக்கினார். அதிதி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் சாரா லோபெஸ்சையும் (கொலம்பியா), அரைஇறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னத்தையும் வீழ்த்தி இருந்தார். இதன் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 150-146 என்ற புள்ளி கணக்கில் துருக்கியின் இபெக் டாம்ருக்கை தோற்கடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்து இருந்தது.

பின்னர் நடந்த ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஓஜாஸ் பிரவீன் டியோடேல் 150-149 என்ற புள்ளி கணக்கில் போலந்தின் லூகாஸ்சை பிரிப்ஸ்கியை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 21 வயதான ஓஜாஸ் பிரவீன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார்.

புதிய சரித்திரம் படைத்த அதிதி கூறுகையில், 'நான் நமது நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். மற்றவை எல்லாம் எனது வழியில் அமைந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நமது தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடந்தது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது தொடக்கம் தான். அடுத்து ஆசிய விளையாட்டு போட்டி வருகிறது. அதிலும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன். 17 வயதிலேயே நான் உலக சாம்பியனாக உருவெடுத்து இருப்பது சிறப்பானதாகும். நான் உலக சாம்பியனாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.