புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் அறிமுகமான முதல் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை அனஹத் சிங், இந்த சாதனை மிகவும் அற்புதமானது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் அனஹத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
மேலும், மகளிர் அணிப் பிரிவிலும் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு அனஹத் சிங் முக்கிய பங்காற்றினார்.
இச்சாதனை குறித்து அனஹத் சிங் கூறியதாவது:-
“ஆசிய விளையாட்டு ஒற்றையர் பிரிவில் நான் விளையாடிய முதல் போட்டி இதுதான். அதிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் அற்புதமாக உள்ளது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகவும் தீவிரமாக போராடினேன். ஆனால், எப்போதும் நாம் நினைப்பது போல எல்லாமே நடப்பதில்லை. இருப்பினும், இந்தப் பதக்கத்தை வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த முறை கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வேன்” என்று தெரிவித்தார்.
மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் அனஹத் சிங், மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய ஸ்குவாஷ் அணி மொத்தம் 5 பதக்கங்களை வென்றது. இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றி தொடரை நிறைவு செய்தது.