லண்டன்,
லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் இந்தியாவின் அனஹத் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், எகிப்தின் மரியம் மெட்வாலியை (30-வது இடம்) எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் வெறும் 11 நிமிடங்களில் 11-3, 11-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அனஹத் சிங், அடுத்த சுற்றில் பெல்ஜியத்தின் நெலே கில்லிஸை (11-வது இடம்) எதிர்கொள்கிறார்.
ஆண்கள் பிரிவில் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள ரமித் டாண்டன், கத்தாரின் அப்துல்லா அல்-தமீமியை (61-வது இடம்) எதிர்கொண்டார். 20 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் 11-6, 11-7 என்ற செட் கணக்கில் ரமித் டாண்டன் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ரமித் டாண்டன் அடுத்த சுற்றில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் 8-ம் நிலை வீரரான முகமது எல்ஷோர்பாகியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான வீர் சோத்ரானி (38-வது இடம்), சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மியை (34-வது இடம்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 9-11, 9-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.