பிலிப்பைன்ஸ்,
இந்தியாவின் 100-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை அனுஜ் ஸ்ரீவாத்ரி படைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த செஸ் வீரர் அனுஜ் ஸ்ரீவாத்ரி. இவர் பிலிப்பைன்ஸில் நவம்பர் 3 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், மனம் தளராமல் அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடினார்.
மீதமிருந்த 8 சுற்றுகளில் 6 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு செய்து 7 புள்ளிகளைக் குவித்தார். இதன் மூலம் மொத்தம் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
வியட்நாமின் கிராண்ட்மாஸ்டர் நுயென் டுக் ஹோவா 6.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பிலிப்பைன்ஸின் நூரி அலெகின் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அனுஜ் ஸ்ரீவாத்ரிக்கு நேரடியாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், 1988-ம் ஆண்டு அந்தப் பட்டத்தைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது 100-வது என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.
அதேபோல், இதுவரை கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறாத மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு, அனுஜ் ஸ்ரீவாத்ரி மூலம் அந்தப் பெருமை கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.