புதுடெல்லி,
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
பவானி தேவி
இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.