ஐச்சி-நகோயா,
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், 3-வது நாள் முடிவில் இந்தியா பதக்கப் பட்டியலில் 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்46 பிரிவில் இந்திய வீரர்கள் மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தனர். சச்சின் கிலாரி 15.79 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், முகமது யாசர் 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். பிரவீன் 13.83 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
உயரம் தாண்டுதல் டி44 பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2.05 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் புதிய போட்டி சாதனையையும் அவர் படைத்தார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் டி47 பிரிவில் திலீப் காவித் மகாது தங்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினார்.
ஈட்டி எறிதலில் மஞ்சித், பாக்யஸ்ரீ ஜாதவ், முகமது பாசில் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். வில்வித்தைப் போட்டியிலும் ஷீத்தல் தேவி - பாயல் நாக் இணை பதக்கம் வென்று அசத்தியது.
பாரா தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். மூன்றாவது நாள் முடிவில் 62 பதக்கங்களுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அடுத்தடுத்த நாட்களிலும் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது.