ஐச்சி-நகோயா,
ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளி வென்று இந்தியா அசத்தியுள்ளது.
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கத்தையும், பன்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதேபோல், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராகேஷ்பாய் பட் வெண்கல பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான டி64 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2.05 மீட்டர் உயரத்தைத் தாண்டி புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையை படைத்தார்.
இரண்டு முறை பாராலிம்பிக் பதக்கம் வென்றவரான பிரவீன் குமார், முதலில் 1.95 மீட்டர் உயரத்தைக் கடந்து போட்டி சாதனையைச் சமன் செய்தார்.
தொடர்ந்து 2.00 மீட்டர் உயரத்தையும் தாண்டிய அவர், தனது மூன்றாவது முயற்சியில் 2.05 மீட்டர் உயரத்தைக் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான பன்டி, 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி ஆகிய இரு பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தினர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் டி37 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்பாய் பட் 11.50 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் போட்டியில் சவுதி அரேபிய வீரர் அலி அல் நக்லி 11.31 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தையும், இந்தோனேசிய வீரர் சப்தயோகோ பூர்ணமோ 11.35 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.