அயிச்சி நகோயா
ஆசிய பாரா துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. தொடர்ந்து, 24-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம், 45 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
அவர்களில், மோனா அகர்வால் அதிரடியாக விளையாடி மொத்தம் 250 புள்ளிகள் குவித்து தங்க பதக்கம் வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான அவானி லேகரா 249.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
2022-ம் ஆண்டு ஹாங்சோ விளையாட்டு போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று அவானி லேகரா சாதனை படைத்திருந்த நிலையில், அதனை மோனா தற்போது முறியடித்து உள்ளார். இரு வீராங்கனைகளுக்கும் இடையே 0.4 புள்ளிகளே வித்தியாசம் உள்ளது. போட்டியில், தென் கொரியாவின் லீ யுன்ரி 227.9 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.
மோனா தகுதி சுற்றின்போது, 629.1 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்ததுடன், ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், தகுதி சுற்றில் இதற்கு முன்பு சீனாவின் ஜாங் குய்பிங் நிகழ்த்திய சாதனையையும் முறியடித்து உள்ளார்.