புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது நாள் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மகளிர் இரட்டையர் பிரிவில் த்ரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்று 16வது சுற்றுக்கு முன்னேறியது.
உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லாரன் லேம் - அலிசன் லீ இணையை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திரிஷா - காயத்ரி இணை 16வது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை உன்னதி ஹுடா, மியான்மரின் தெட் ஹதார் துசார்-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் உன்னதி 22-20, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆசித் சூர்யா - அம்ருதா பிரமுதேஷ் ஜோடி கடுமையான போராட்டத்துக்கு பிறகு தோல்வியடைந்தது.
மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் ருத்விகா காடே - ரோஹன் கபூர் ஜோடி, கனடாவின் கிறிஸ்டல் லாய் - ஜொனாதன் லாய் இணையை எதிர்கொண்டது. மூன்று செட்கள் வரை நீடித்த இந்த போட்டியில் இந்திய ஜோடி 22-20, 19-21, 17-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.