பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 4-ம் நிலை ஜோடிக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்தியாவின் திரிஷா - காயத்ரி... பதக்கம் உறுதி

காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, உலக தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள சீனாவின் ஜியா யிபான் - ஜாங் ஷுசியான் ஜோடியை எதிர்கொண்டது.

இந்தியா,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் 4-ம் நிலை ஜோடிக்கு அதிர்ச்சி

காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, உலக தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள சீனாவின் ஜியா யிபான் - ஜாங் ஷுசியான் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 16-21 என்ற கணக்கில் இழந்தது. இதனால் போட்டியில் சீன ஜோடியின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிஷா - காயத்ரி ஜோடி அடுத்தடுத்த செட்களில் அபாரமாக கம்பேக் கொடுத்தது.

அரையிறுதிக்கு முன்னேற்றம்

2-வது செட்டில் அதிரடியாக விளையாடிய இந்திய ஜோடி 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய திரிஷா - காயத்ரி ஜோடி 21-13 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியது.

இதன்மூலம் இந்திய ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் 4-ம் நிலை ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையையும் இந்த கூட்டணி படைத்துள்ளது.

2011-க்கு பிறகு

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஜவாலா கட்டா - அஸ்வினி ஜோடி உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா - காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.