சென்னை,
சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார்.
குகேஷை வீழ்த்திய அர்ஜூன்
8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி 7 சுற்றுகள் கொண்டதாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைசி, 63-வது காய் நகர்த்தலில் சென்னையைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவ், இந்திய வீரர் நிஹால் சரினை 38-வது காய் நகர்த்தலில் வென்றார். இந்திய வீரர் பிரனேஷ் - அமெரிக்காவின் ஹான்ஸ் நிமன் மற்றும் பிரான்ஸ் வீரர் அலிரெஜா - ரஷியாவின் டிமிட்ரி இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அர்ஜூன் எரிகைசி மற்றும் அலிரெஜா தலா 3½ புள்ளிகளுடன் கூட்டாக முதலிடத்தில் உள்ளனர்.
போட்டியின் 6-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. அர்ஜூன் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொள்வாரா? உலக சாம்பியன் குகேஷ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பில் செஸ் ரசிகர்கள் உள்ளனர்.