சமர்கண்ட்,
46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஓபன் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவுடன் மோதியது. இதில் இந்திய வீரர் நிஹால் சரின் 37-வது காய் நகர்த்தலில் இந்தோனேசியாவின் ஆரிப் அப்துல் ஹபிசை பதம் பார்த்தார். மற்ற இந்தியர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி தங்களது ஆட்டங்களில் 'டிரா' செய்தனர். முடிவில் இந்தியா 2.5 -1.5 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா பின்லாந்தை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றது. இந்திய அணியில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். வைஷாலி- அனஸ்டசியா கெய்னானென் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.