பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: டிரிபிள் ஜம்பில் தமிழக வீரர்கள் அசத்தல்

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 3 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

கிளாஸ்கோ,

காமன்வெல்த் போட்டி டிரிபிள் ஜம்பில் தமிழக வீரர்கள் சித்ரவேல், செல்வபிரபு இறுதி சுற்றை எட்டி அசத்தினர்.

தமிழக வீரர்கள்

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதியில் தேசிய சாதனையாளரான தமிழகத்தை சேர்ந்த விஷால் தனது பிரிவில் (46.33 வினாடி) 6-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலின் (டிரிபிள் ஜம்ப்) தகுதி சுற்றில் தமிழக வீரர்களான பிரவீன் சித்ரவேல் (16.41 மீட்டர்) செல்வபிரவு திருமாறன் (16.26 மீட்டர்) ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டியை எட்டினர். 12 வீரர்கள் இடையிலான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

பளுதூக்குதல்

பெண்களுக்கான பளுதூக்குதலில் 86 கிலோவுக்கு மேலான பிரிவில் இந்திய வீராங்கனை மார்ட்டினா தேவி மைபாம் ஸ்னாட்ச் முறையில் 105 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க்கில் 140 கிலோ என மொத்தம் 245 கிலோ எடை தூக்கி 5-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார். கிளீன் அண்ட் ஜெர்க்கில் 144 மற்றும் 146 எடையை தூக்கும் முயற்சி கைகூடாததால் அவரால் பதக்கமேடையில் ஏற முடியவில்லை.

நீரஜ் சோப்ரா

23-வது காமன்வெல்த் விளையாட்டில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் 18 வீரர்கள் கொண்டனர். இதில் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் தங்கம் வென்ற சாதனையாளரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தனது 2-வது முயற்சிலேயே இறுதி சுற்றை உறுதி செய்து விட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் 3-வது முயற்சியை தவிர்த்து விட்டார். மற்ற இரு இந்திய வீரர்கள் ரோகித் யாதவ் (78.37 மீ), யாஷ்விர் சிங் (78.36 மீ) ஆகியோரும் இறுதிப்போட்டியை உறுதி செய்தனர்.

ருமேஷ் தரங்கா

மற்றபடி எதிர்பார்த்தது போலவே நடப்பு ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (78.63 மீட்டர்), முன்னாள் உலக சாம்பியன் கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (81.29 மீட்டர்), வளர்ந்து வரும் நட் சத்திரம் இலங்கையின் ருமேஷ் தரங்கா (82.84 மீ), உலக சாம்பியனான டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் கேஷோர்ன் வால்காட் (78.26 மீ) ஆகியோரும் இறுதிசுற்றை எட்டினர். தகுதி சுற்றில் தரங்கா தான் அதிக தூரத்துக்கு ஈட்டி எறிந்திருப்பது கவனிக்கத்தக்கது. 12 வீரர்கள் இடையிலான பதக்கத்துக்கான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.45 மணிக்கு நடக்கிறது.