பிற விளையாட்டு

பி.டி.உஷாவுக்கு எதிரான மனு தள்ளுபடி... டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீதிமன்றத் தீர்ப்பால் பி.டி.உஷா தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு தொடர்கிறது.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் பிடி உஷா பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

பி.டி.உஷாவின் பெயருக்கு எதிர்ப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்போதைய தலைவராக உள்ள பி.டி.உஷா, சிறப்புத் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள் பிரிவில் பெண் பிரதிநிதிகளுக்கான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, இந்திய ஐஸ் ஆக்கி சங்கத்தின் குர்பிரீத் சிங் பக்சி தலைமையிலான பிரிவு, பொதுக்குழுவுக்கான தனது பிரதிநிதியாக பி.டி.உஷாவை முன்மொழிந்தது.

ஆனால், பி.டி.உஷா அந்த சங்கத்தின் உறுப்பினர் இல்லை என்றும், அவரை பிரதிநிதியாகப் பரிந்துரைக்க முடியாது என்றும் கூறி, எதிர் தரப்பை சேர்ந்த குன்சாங் நம்க்யால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் அதிகாரி அனுமதி

இதற்கு முன்பாக, நவம்பர் 15-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் அதிகாரி, பி.டி.உஷாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளை நிராகரித்திருந்தார்.

இதனை விசாரித்த தேர்தல் அதிகாரி, வேறொரு விளையாட்டுச் சங்கத்துடன் தொடர்பில் இருப்பது மட்டுமே ஒருவர் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதியாக இருப்பதற்குத் தடையாகாது எனத் தெரிவித்தார்.

நவம்பர் 14-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், பி.டி.உஷா மற்றும் ஹர்ஜிந்தர் சிங் ஆகியோர் சங்கத்தின் செயலில் உள்ள உறுப்பினர்கள் என்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றன.

மனு தள்ளுபடி

தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து குன்சாங் நம்க்யால் தரப்பினர் டெல்லி ஐகோர்ட்டை அணுகினர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் பி.டி.உஷாவின் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கு எதிரான சட்டரீதியான சவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

71 பேர்

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 71 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் பி.டி.உஷா மட்டுமின்றி அஞ்சு பாபி ஜார்ஜ், சாய்னா நேவால், ராணி ராம்பால், ககன் நரங், யோகேஷ்வர் தத், விஜேந்தர் சிங், மீராபாய் சானு, சஜன் பிரகாஷ் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்திய உறுப்பினர் நீட்டா அம்பானி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 5-ம் தேதி தேர்தல்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர், மூத்த துணைத் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொருளாளர், இரண்டு இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் நவம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்படும். வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பால் பி.டி.உஷா தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு தொடர்கிறது. இருப்பினும், அவர் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்படுவது தேர்தல் முடிவைப் பொறுத்தே அமையும்

SCROLL FOR NEXT