ஒடேன்சே,
மொத்தம் ரூ.9 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க சுற்றில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. முன்னாள் உலக சாம்பியனான 31 வயது சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனுமான அன்சே யங்குடன் (தென்கொரியா) மல்லுக்கட்டுகிறார். அவருக்கு எதிராக இதுவரை 10 முறை மோதியதில் சிந்து ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தேவிகா சிஹாக், போர்ன்பவீசோச்சுவோங்கையும் (தாய்லாந்து), உன்னதி ஹூடா, ஹான் கியான்ஜியையும் (சீனா), தன்வி ஷர்மா, நட்சுமி நிடைராவையும் (ஜப்பான்), அஷ்மிதா சாலிஹா, கலோயனா நல்பன்டோவாவையும் (பல்கேரியா) எதிர்கொள்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சோய் டின் சென்னுடன் (சீன தைபே) பலப்பரீட்சை நடத்துகிறார். மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, அல்வி பர்ஹானையும் (இந்தோனேசியா), ஸ்ரீகாந்த், அர்னாட் மெர்க்லேவையும் (பிரான்ஸ்) சந்திக்கின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடியுடன் மோதுகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறிய முன்னாள் நம்பர் ஒன் இணையான சாத்விக்-சிராக் கூட்டணி மீண்டும் தங்களது சிறந்த நிலைக்கு திரும்ப முயற்சிப்பார்கள்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபி சந்த், ருதபர்ணா பாண்டா-ஸ்வேதாபர்ணா பாண்டா ஜோடிகள் கால்பதிக்கின்றன.