ஒடென்சே,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
டென்மார்க்கின் ஒடென்சே நகரில் இன்று தொடங்கியுள்ள டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் நட்சுகி நிடாரியாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை தன்வி ஷர்மா 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதற்குப் பதிலடி கொடுத்த ஜப்பான் வீராங்கனை, 2-வது செட்டை 21-16 என வென்றார்.
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சிறப்பாக விளையாடிய தன்வி ஷர்மா, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் செட்டை வென்றார்.
இதன் மூலம் 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற தன்வி ஷர்மா, டென்மார்க் ஓபன் தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.