பிற விளையாட்டு

கொத்தனாரின் மகன்... சீனாவில் சர்வதேச விருது வென்று அசத்தல் - ஈரோடு இளைஞரின் சாதனை பயணம்

இந்தப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 12 பேர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான ம. சுரேந்திரன், சீனாவில் நடைபெற்ற உலகத் திறன் போட்டியில் சிறப்புத் தகுதி விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனாவில் சர்வதேச அங்கீகாரம்

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த செப்டம்பர் 22 முதல் 27-ம் தேதி வரை 48-வது உலகத் திறன் போட்டி (WorldSkills Competition) நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன் பிரிவுகளில் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ம. சுரேந்திரன், பிளாஸ்டரிங் மற்றும் ட்ரைவால் சிஸ்டம்ஸ் பிரிவில் 7-வது இடத்தைப் பிடித்தார். இதற்காக அவருக்கு 'Medal for Excellence' எனப்படும் சிறப்புத் தகுதி விருது வழங்கப்பட்டது.

ஆர்வம்

சுரேந்திரனின் தந்தை மணி கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே தந்தை கட்டுமானப் பணிகளை செய்வதை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த சுரேந்திரன், செங்கற்களை எடுத்துக் கொடுப்பது, சிமெண்ட் மற்றும் மணலைக் கலப்பது, சுவர்களுக்குப் பூச்சு வேலை செய்வது எனக் கட்டுமானப் பணிகள் தொடர்பான பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இதுவே கட்டுமானத் துறையின் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின.

சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள சுரேந்திரன், கல்லூரியில் படித்தபோதே 2023-ம் ஆண்டு உலகத் திறன் போட்டியில் பங்கேற்கும் முயற்சியைத் தொடங்கினார். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு கட்டத் தேர்வுகளைக் கடந்து இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சிறுவயது அனுபவம் தந்த வெற்றி

கட்டுமானப் பணிகள் குறித்த புத்தக அறிவுடன், சிறுவயதில் தந்தையுடன் பணியாற்றியபோது கிடைத்த நடைமுறை அனுபவமும் சுரேந்திரனுக்குப் பெரிதும் உதவியது. தற்போது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி சர்வதேசப் போட்டியில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இந்த உலகத் திறன் போட்டியில் இந்தியா 6 வெள்ளிப் பதக்கங்களையும், 20 சிறப்புத் தகுதி விருதுகளையும் வென்று ஒட்டுமொத்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT