பிற விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியா

இந்திய அணியில் ஈஷா சிங் அதிகபட்சமாக 590 புள்ளிகளைக் குவித்தார்.

தோகா,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

1,761 புள்ளிகளுடன் முதலிடம்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுப்பராஜு ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,761 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்தது.

தென் கொரியா 1,7கி48 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் 1,745 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இந்திய அணியில் ஈஷா சிங் அதிகபட்சமாக 590 புள்ளிகளைக் குவித்தார்.

தனிநபர் பிரிவில் ஏமாற்றம்

இதற்கிடையே, மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவின் தகுதிச்சுற்றில் ஈஷா சிங் 3-வது இடத்தையும், மனு பாக்கர் 6-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

ஆனால் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், ஈஷா சிங் 11 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்தனர். முதல் 3 இடங்களுக்குள் வராததால் ஒலிபிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இந்த பிரிவில் இழந்தது.

இந்தியாவின் பதக்க வேட்டை

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

மகளிருக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் தனிநபர் பிரிவில் நிவேதிதா நாயர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஜெய்பால் மால்வியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இதே பிரிவின் தனிநபர் போட்டியில் ரவீந்தர் சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், ஷாம்பவி க்ஷிர்சாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இதன் மூலம் தோகாவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்..

SCROLL FOR NEXT